“ஆளுநரின் பேச்சு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம்” - திருமாவளவன்!
சமீபத்தில் சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதிதிராவிட மக்களை ஒரு தீய சக்தி பிளவுபடுத்தி வைத்திருக்கிறது என்றும், பட்டியல் சமூகத்தில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆளுநரின் பேச்சு ஒரு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
“தலித்துகளில் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆளுநரின் பேச்சு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம். ஆதிதிராவிட மக்களிடமிருந்து விசிகவை அந்நியப்படுத்துகிற உள்நோக்கத்தோடு ஆளுநர் பேசி வருகிறார். சீமான் பொருத்தம் இல்லாத அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார். சீமான் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா? என்ற கேள்வி எழுகிறது. சீமானின் கருத்துகள் பாசிசவாதிகளின் கருத்துகளை கொண்டதாக பரிணாமம் பெற்று வருகிறது. இது அவரது எதிர்காலத்திற்கும் நல்லதல்ல” என தெரிவித்தார்.