“திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது” - அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது எனவும், தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் ரவி தான் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். ஆனால் அவர் தனது உரையை நிகழ்த்தாமலேயே பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“இந்த அரசினுடைய சாதனைகள் மக்களுக்கு சென்றடையக் கூடாது என்பதற்காக ஆளுநர் இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறார். தேசத்திற்காக அற்பணித்த தலைவர்கள் பல தமிழ்நாட்டில் உள்ளனர். சுதந்திர போராட்டத்தில் முன்னின்றவர்கள் காங்கிரஸ் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். பாஜகவினரும் தமிழ்தாய் வாழ்த்து பாடி முடிக்கும் வரை எழுந்து நின்றனர். தேசிய கீதத்திற்கு எந்த வகையில் தமிழ்நாடு அவை பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை விட தான் பெரியவர் என்று நினைப்பு ஆளுநருக்கு இருக்கிறது. திமுகவிற்கு பாடம் நடத்த வேண்டிய தேவை ஆளுநருக்கு கிடையாது. தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் ரவி தான். இரண்டு முறை அவர் தான் தேசிய கீதத்தை அவமதித்தவர். அவர் தான் அவர் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் ஆளுநர் பதவியில் அவர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார். அவரே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்”
இவ்வாறு தெரிவித்தார்.