”ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது” - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!
உச்சநீதிமன்றத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு, இன்று ஆறாவது நாளாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
வழக்கு விசாரணை தொடங்கிய போது தமிழ்நாடு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர்,
“அரசியல் சாசனம் பிரிவு 200ன் படி ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது. அதே போன்று மாறும் சூழ்நிலை, கொள்கைகள் காரணமாக அதனை மீண்டும் நிறைவேற்றாமல் கைவிடும் அதிகாரமும் சட்டபேரவைக்கே உள்ளது. ஆட்சி மாற்றம் அல்லது கொள்கை மாற்றம் என்று ஆளுநர் மசோதாவை நிறுத்திவைக்க அல்லது கைவிட அதிகாரம் இல்லை.
ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது. அமைச்சரவை தான் முடிவுகளை எடுக்க முடியும். ஆளுநர் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்ற மத்திய அரசின் வாதத்துக்கு தமிழகம் எதிர்ப்பு. ஆளுநர் 1400 நாட்கள் வரை மசோதா மீதான ஒப்புதலை நிறுத்தி வைத்து தவறு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியலமைப்பு பிரிவு 200ல் கூறப்பட்டுள்ள AS SOON AS என்றால் உடனடியாக என்றுதான் அர்த்தம். இதனைத்தான் அம்பேத்கர் இறுதியாக ஏற்றுக் கொண்டார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு இல்லாததால் தான் நீதிமன்றம் காலக்கெடுவை விதிக்க காரணமானது.
சட்டப்பேரவையில் ஒரு மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றி வரும்போது அதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டியது ஆளுநர் உடைய கடமை. மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் அதற்கான காரணங்களை கூற வேண்டும். மாறாக கால வரம்பின்றி கிடப்பிலேயே போட்டு அந்த மசோதாவை மழுங்கடிக்க முடியாது” என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு பிரிவு 142யை பயன்படுத்தி, குடியரசு தலைவர் அல்லது ஆளுநர் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் ஒரு பார்முலாவை(formula) வை வகுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு தமிழ்நாடு அரசு, வெளிப்படையான தடைகள் இல்லாவிட்டால்,உச்சநீதிமன்றம் அவ்வாறு ஒரு பார்முலாவை(formula) வகுக்க முடியும் என்று பதிலளித்தனர்.