"விடுபட்ட காளைகளுக்கு கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் வாயப்பு வழங்கப்படும்" - அமைச்சர் மூர்த்தி உறுதி!
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும், அலங்காநல்லூரில் 16ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர் மாடம், இரண்டடுக்கு பாதுகாப்பு வேலிகள், காளைகள் சேகரிக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைக வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,
"அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் மொத்தம் 3300 காளைகள் அவிழ்க்கப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார். அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் 15 கிராமங்களுடைய ஜல்லிக்கட்டுகள் நடைபெறும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகளும், கிராமங்களின் பெயர்களும், பின்னர் அறிவிக்கப்படும். அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்காமல் விடுபட்ட காளைகளுக்கு கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் வாய்ப்பு வழங்கப்படும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.