“ஈரோடு இடைத்தேர்தல் கானல் நீரைப் போன்றது” - அண்ணாமலை!
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பாஜகவை பொறுத்தவரை தேர்தலை புறக்கணிப்பது என்பது மிகமிக அபூர்வம். விக்கிரவாண்டியில் நடந்ததை நாம் பார்த்தோம். மக்கள் மனசாட்சிபடி தேர்தலில் தவறு செய்யகூடிய கட்சிக்கு சாட்டையடி கொடுப்பார்கள் என நம்புகிறோம். தேர்தலை கேவலபடுத்தும் திமுகவின் செயல்பாடு கடைசிமுறையாக இருக்கட்டும்.
தேர்தலில் நின்றால்தான் ஜனநாயக கட்சி முழுமை பெறும் என்பதை நாங்கள் நம்பவில்லை. இந்த தேர்தல் முதலும், கடைசியுமாக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் தேர்தலாக இருக்க வேண்டும் என கருதுகிறோம். ஆளுநர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஏன் தள்ளப்பட்டார் என்பதை நாம் உணர வேண்டும்.
ஆளுநருக்கு எதிரான சுவரொட்டிகள் பேச்சுக்களை முதல்வர் கண்டிக்கவில்லை என்றால், அதை ஊக்குவிக்கிறார் என்றுதான் அர்த்தம். ஆளுநர் கூறி இருப்பது சரியே. அதில் எந்த தவறும் இல்லை. குற்றம் சொல்லுங்கள். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை ஆபாசமாக, அறுவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. பெரியாருக்கும் நிகழ்கால தமிழகத்துக்கும் தொடர்பு இல்லை. சீமான் அவருடைய இயக்கத்தினுடைய பாதை என்பதால், அவர் அப்படி பேசி இருக்கிறார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 1962 முரசொலியை வாங்கி பார்க்க வேண்டும். டங்ஸ்டன் ஏலம் விட்டால் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் கிடையாது. முதலமைச்சர் உண்மை தவறி பல விஷயங்களை பேசி இருக்கிறார். சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை கேட்டிருந்தால் நடுநிலையான சபாநாயகர் என கூறலாம்.
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அண்ணா பல்கலைகழகம், பாலியல் வழக்கு எப்.ஐ.ஆர் லீக்கானது கண்ணுக்கு தெரியாது. இந்த ஒரு எம்.எல்.ஏ வெற்றி பெறுவதால் என்ன ஆக போகிறது. இதற்கு முன்பு ஈ.வி.கே.எஸ் வெற்றி பெற்று என்ன மாற்றம் நிகழ்ந்தது. இது கானல் நீரை போல நடக்கக்கூடிய தேர்தல். கானல் நீரால் என்ன பயன்?
ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு தரமான பொருட்களை மக்களுக்கு கொடுங்கள். துரைமுருகன் பணிநிறைவு வயதை தாண்டி விட்டார் என்பதை உணரமுடிகிறது” என தெரிவித்தார்.