"ஒட்டு மொத்த நாடும் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக உள்ளது" - அண்ணாமலை பதிவு!
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகள் என, தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கடந்த இருபது ஆண்டுகளில், இலங்கை அரசால், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்குக் காரணம், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தை மறைந்த கருணாநிதி, கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் சேர்ந்து, கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக் கொடுத்ததுதான்.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என்று கூறினார் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை. தமிழக மீனவ மக்களுக்குச் செய்த துரோகம், உங்களுக்கு ராஜதந்திரமா?
காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிறகு, பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருந்தது திமுக. கடந்த நாற்பது ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தபோது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக? இலங்கைப் போரின்போது, திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை ராணுவத்தால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மத்திய அமைச்சர்களாக இருந்து ஊழல் செய்வதில் மட்டுமே மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நம் கண்முன்னே கண்ட வரலாறு.
கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர்களை பத்திரமாக மீட்டது நமது பிரதமர் நரேந்திர மோடி அரசு. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.
In TN today, Law and order is in shambles, sexual atrocities against children and women, and violence against our brothers and sisters of the Scheduled Caste communities is on the rise. At a time when Tamil Nadu is experiencing an unprecedented period of darkness, TN CM Thiru… pic.twitter.com/7Wt0ZDBzh7
— K.Annamalai (@annamalai_k) April 2, 2025
கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு மீட்போம் என்று கூறும் ஸ்டாலினையோ, திமுக காங்கிரஸ் கூட்டணியையோ, பொதுமக்கள் நம்பப் போவதில்லை". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.