8-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! ஆஜராவாரா கெஜ்ரிவால்?
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 8 முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. ஆனால், சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம் என தெரிவித்து சம்மனை திருப்பி அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், மூன்றாவது முறையாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையில் ஈடுபடுவார்கள் எனவும், அவர் கைது செய்யப்படலாம் எனவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பாதுகாப்பிற்காக அவர் வீட்டின் முன் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடதக்கது.
அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனையடுத்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த புகார் தொடர்பாக கெஜ்ரிவால் தனிப்பட்ட முறையில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் விலக்கு அளித்தது. தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என கெஜ்ரிவால் தரப்பு வழக்குரைஞர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று எட்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், மார்ச் 4 ஆம் தேதி கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறையும் கெஜ்ரிவால் ஆஜார் ஆவாரா என்பது கேள்விக்குறியே.