"திமுக ஆட்சியில் மின்சாரத் துறை செயல்படவில்லை!" - இபிஎஸ் கடும் விமர்சனம்!
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்த சம்பவம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசின் மின்சாரத் துறை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். "திமுக ஆட்சியில் மின்சாரத்துறை முழுமையாகச் செயல்படக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாகத்தான் இன்று ஒரு உயிர் பலியாகியுள்ளது.
ஒரு மின் கம்பத்தில் அறுந்து கிடக்கும் மின் கம்பியைக்கூட கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். இது அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் மின் விபத்துகள் நடக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுபோன்ற கவனக்குறைவான விபத்துகள் தொடர்கின்றன. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிப்படுத்துகிறது" என்றார்.
உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க மின்சாரத் துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.