"இந்தியாவிலேயே மோசமாக நடக்கும் ஆட்சி திமுக ஆட்சி தான்!" - அண்ணாமலை குற்றச்சாட்டு!
இந்தியாவிலேயே மோசமாக நடக்கும் ஆட்சி திமுக ஆட்சி தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது :
"பாஜகவினரிடம் சிந்தாந்தம், நேர்மை உள்ளது. தனிமனித துதிபாடல்கள் கிடையாது. பாஜகவிற்கு உத்வேகம்தான் தேவை கடந்த 1 மாத காலத்தில் பணியாற்றியது போல அடுத்த 2 ஆண்டுகள் பாஜகவினர் பணியாற்ற வேண்டும். 2026ம் ஆண்டு விவசாயிகளை முன்னிலைப்படுத்தி, தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியை பாஜக அமைக்கும்.
இந்தியாவிலேயே மோசமாக நடக்கும் ஆட்சி திமுக ஆட்சி தான். திமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்திலும் கீழே சென்றுள்ளது. அன்னிய முதலீட்டில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. 5,400 டாஸ்மாக் கடைகளில் 45 ஆயிரம் கோடிகள் வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை விட அரசு நூலகம், அரசு மருத்துவமனைகள் குறைவாக உள்ளது.
புதிய தமிழ்நாட்டை உருவாக்க வேண்டிய கடமை பாஜகவிற்கு உள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக பாஜக நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்த உள்ளது. வாக்கு கிடைக்காத இடத்தில் கடுமையாக உழைப்போம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஆழமாக உழ வேண்டிய தேவை உள்ளது. பாஜகவில் ஏராளமானோர் இணையத் தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு மக்களின் குரலாக, சாமானிய மக்களின் குரலாக பாஜக நிற்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : “ஆம்ஸ்ட்ராங் அரசியல் அல்லது சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” - காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!
11 மாவட்ட தலைவர்கள் சொந்த பூத்களில் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 55 தலைவர்கள் சொந்த பூத்களில் வெற்றி பெறவில்லை. பாஜகவினர் தங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். மொத்தம் உள்ள மாநில நிர்வாகிகளில் 14% மாநில நிர்வாகிகள் தான் சொந்த பூத்களில் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ளா 86% மாநில நிர்வாகிகள் சொந்த பூத்களில் வெற்றி பெறவில்லை" இவ்வாறு அவர் தெரிவித்தார்.