For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை" - இபிஎஸ் குற்றச்சாட்டு!

11:10 AM Apr 17, 2024 IST | Web Editor
 சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக  இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை    இபிஎஸ் குற்றச்சாட்டு
Advertisement

சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும்,  தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisement

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது.  பின்னர்,  வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால்,  இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்!

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:

சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை.  10%-க்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.  தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

அத்யாவசிய பொருட்கள் விலைக் கடுமையாக உயர்ந்துள்ளது.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.  பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறுகின்றனர்.  அதனை பாஜக அரசும் தடுக்கவில்லை.  தமிழ்நாடு முதலமைச்சரும் எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு பாலைவனம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட அமலாக்க மறுக்கின்றனர்.  தமிழ்நாடு பாதிக்கும் போது அதற்கு தீர்வு காண நாம் சொந்தக் காலில் நிற்க வேண்டும்.  நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் கொடுக்க வேண்டும்.

அதிமுகவை அழிக்க யாரும் பிறந்ததில்லை. பொன்விழா கண்ட கட்சி,  30 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம்.  அதிக அளவில் தேசிய விருதுகளை பெற்றிருக்கிறோம்.  அதிமுக என்ற கட்சி இருப்பதால் தான் ஏழைகளுக்கு திட்டங்கள் போய் சேர்ந்துள்ளது. இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது கனவில் தான் முடியும்.

2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது.  அதே அளவுக்கு வெற்றி இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கிடைக்கும்.  தேர்தல் நேரத்தில் தேனீக்களை போல் அதிமுக தொண்டர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.  இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்"

இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags :
Advertisement