”மதுரை மாநகராட்சி ஊழலுக்கு திமுக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ் நாடு முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர் மதுரை மேற்கு தொகுதியில் பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அபோது பேசிய அவர்,
”2026ல் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். இன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், போதை பொருள் விற்பனை நடக்கிறது. திமுக ஆட்சியின் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இந்த போதை பொருள்களினால் மாணவர்கள் அதிகம் பாதிக்கபடுகிறார்கள். நம் குழந்தைகள் நம் கண்முன்னே அழிவதை காண்கின்றோம். திமுகவின் முதல் ஆண்டு ஆட்சியிலேயே போதைபொருள் விற்பனையை தடுக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தினோம். ஆனால் இன்று போதைபொருள் அதிக அளவு புழக்கத்தில் வந்து விட்டது. தமிழ் நாட்டில் ஒரு பொம்மை ஆட்சி நடக்கிறது. மதுரையில் மாநகராட்சியில் ஊழலால் திமுக மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்து இருக்கிறார்கள். மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல் நடைபெற்று உள்ளது. மதுரை மேயரை விட்டு விட்டு அருடைய கணவரை கைது செய்வது சரியில்லை. அதற்கு பொறுப்பு அதிகாரிகளே. மதுரை மாநகராட்சி ஊழலுக்கு திமுக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி பெய்யான செய்திகளை வெளியிடுகிறார். வெளிநாடுகளில் ஒரு தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டால் தொழில் தொடங்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும்.
ஆனால் ஸ்டாலின் புரிந்துணர்வு போட்ட உடனே அந்த தொழில் தொடங்கி நடைபெறுவதாக பொய்யான அறிக்கைகளை விடுகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டுமான பொருட்களின் விலை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்படும் என்று கூறினார்கள். கட்டுமான பொருட்களின் விலை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் எம்சாண்ட் 3000 ரூபாய் விற்கப்பட்டது. தற்பொழுது திமுக ஆட்சியில் 5500 விற்கபடுகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்று வீடு கட்டும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் கம்பி 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது தற்பொழுது திமுக ஆட்சியில் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அதிமுக ஆட்சியில் மதுரையில் காவிரி குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டபட்டது. ஆனால் அந்தத் திட்டத்தை வேண்டும் என்றே திமுக அரசு முடக்கி உள்ளது. அத்திட்டத்தை ஆமை வேகத்தில் செயல்படுத்துகிறது. மீண்டும் அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் விரைந்து செயல்படுத்தபடும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் தீபாவளிக்கு அனைத்து பெண்களுக்கும் இலவசமாக சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மணமகளுக்கு மணமகனுக்கும் பட்டு சேலை பட்டு வேஷ்டி வழங்கப்படும்”
என்று பேசினார்.