"மழைநீரில் தத்தளிக்கவிட்டதோடு மக்களைத் தாகத்தில் தவிக்கவிடத் திட்டமிடும் திமுக அரசு" - நயினார் நாகேந்திரன்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களைத் தாகத்தில் தவிக்கவிடும் விதமாக, லாரிகள் மூலம் வழங்கும் குடிநீருக்கான கட்டணத்தைத் திமுக அரசு உயர்த்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முறையான குடிநீர் இணைப்புகளை வழங்க இயலாத திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் லாரிகள் மூலம் வழங்கும் குடிநீரை நம்பியே தலைநகர் முழுவதும் வீடுகளும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், எந்தவொரு காரணமுமின்றி 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.75-ம், 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.125-ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கும். எனவே, உடனடியாக விலை உயர்வை அறிவாலயம் அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
குடிநீர், பால், சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டும் விலையேற்ற மாடலை மக்களே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரைவில் வீசியெறிவர்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.