"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை" - இபிஎஸ் பேச்சு!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விஷச்சாராயம் அருந்தி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமையில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் ,கருணாபுரம் ,மாதவச்சேரி , சேஷசமூத்திரம் ஆகிய பகுதிகளில் விஷச்சாராய உயிரிழிப்புகளை கண்டித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும், ஏராளமான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : “மக்கள்நல திட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்” – நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி!
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :
"கள்ளக்குறிச்சியில் விஷச்சாரயம் குடித்து 59 பேரின் உயிரிழந்த சம்பவத்திற்குத் தார்மீக பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் பதவி விலக வேண்டும். இந்த விஷச்சாரய சம்பவம் அதிர்ச்சி தருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் திமுக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
சட்டசபையில் விஷச்சாராயம் குறித்துப் பேச முற்பட்ட போது அதற்கு அனுமதி தரப்படவில்லை. கேட்டால் சட்டசபையில் முக்கிய பிரச்னைகளை மட்டும் பேசுங்கள் என்கிறார்கள். இது முக்கியமான பிரச்னை இல்லை என்றால் வேறு எது தான் முக்கியமான பிரச்னை.
கள்ளக்குறிச்சியில் முக்கிய திமுக பிரமுகர்கள் ஆதரவோடுதான் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் தடை இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை.
கள்ளக்குறிச்சியில் 58 பேரின் உயிரிழப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இங்குள்ள காவல் துறையால் நீதி கிடைக்காது. சிபிஐ விசாரணை வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.