4 ஆண்டுகளாக தேடப்பட்ட நபர் | சினிமா பாணியில் பிடித்த போலீசார்!
சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த நிலையில், 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் குற்றவாளியை சினிமா பாணியில் போலீசார் பிடித்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த பட்டதாரியான சிவக்குமார் வசதியாக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும் தெரியும். கடந்த 2004ல் கேரளாவில் ஒரு கொலை வழக்கில் இவரை கைது செய்து இவரிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே கடந்த 2012ல் வேளச்சேரியில் தன்னுடன் தங்கியிருந்த ஏழுமலை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் நன்நடத்தை காரணமாக அவர் வெளியே அனுப்பப்பட்டார். தொடர்ந்து கேரள கொலை வழக்கில் இவர் குற்றவாளி என 2019ல் தீர்ப்பளிக்கப்பட்டது. 6 மாதங்கள் கழித்து கன்னூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து அவர் பரோலில் வெளியே வந்தார். இதனையடுத்து அவர் வேளச்சேரி கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
அவர் விசாரணைக்கு ஆஜராகததை தொடர்ந்து 2020ல் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்த போது பெங்களூருவில் இருக்கும் வங்கியிலிருந்து சிறிய தொகை அவ்வப்போது வங்கிக் கணக்குக்குப் போடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்பேரில் அப்பகுதிக்குச் சென்ற போலிசாருக்கு அங்குள்ள உணவகம் ஒன்றில் அவர் வேலை செய்ததும், தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்று ஈரோடு உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. சிவக்குமார் வேறு வேறு இடங்களில் வேலை செய்தும், சிம் கார்டுகளை அவ்வப்போது மாற்றியும் வந்ததால் அவரை பிடிப்பது போலுசாருக்கு சவாலாக அமைந்தது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிவக்குமாரிடம் பேசுவதற்கு அவரது மனைவி தனியாக ஒரு சிம்கார்டை பயன்படுத்தி வந்ததும், பல நேரங்களில் அவர்கள் சந்தித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை பிடிக்க போலீசார் ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி, மதுரை ஸ்டைலில் பரோட்டா செய்யத் தெரிந்த காவலர் ஒருவர், சிவக்குமார் காசாளராக பணியாற்றி வந்த உணவகத்திற்கு சென்றார்.
அங்கு தான் ஒரு பரோட்டா மாஸ்டர் எனவும், உணவகம் தொடங்க இருப்பதால் அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறி அங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த காவலர் சிவக்குமாரிடம் நன்றாக பழகிய நிலையில், மற்ற போலீசார் உரிய நேரத்தில் உணவகத்தை சுற்றிவளைத்து சிவக்குமாரை கைது செய்தனர். தற்போது சிவக்குமார் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.