“பொங்கல் பரிசுத் தொகை குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்..!” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : அதானி குழும வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு தேவையில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இதனிடையே பொங்கல் பரிசுத் தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்படாததால், பல்வேறு தரப்பில் இருந்து பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸும், ரூ.3,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.