ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு!
மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, நியமன உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து லோக் ஆயுக்தாவின் புதிய தலைவராக முன்னாள் நீதிபதி, ராஜமாணிக்கம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் லோக் ஆயுக்தாவின் ராமராஜ், ஆறுமுக மோகன் அலங்கா மணி ஆகிய இருவர் உறுப்பினர்களாக இன்று பதவி ஏற்று கொண்டார்கள்.
இன்று தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம்,லோக் ஆயுக்தா தலைவர் பதவியில் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவி வகிப்பார். உறுப்பினர்கள் இன்றிலிருந்து 5 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பி.ராஜமாணிக்கம் ?
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1959 ஆம் ஆண்டில் பிறந்தவர் பி. ராஜமாணிக்கம். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி கடந்த 2021 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பின்பு லோக் ஆயுக்தா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். லோக் ஆயுக்தா தலைவரின் ஓய்வுக்கு பின்னர் கடந்த சில மாதங்களாக பொறுப்புத் தலைவராக பதவி வைத்து வகித்து வந்தார்