"மத்திய அரசு வரியில் தமிழ்நாட்டிற்கு 50% தர வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
நிதி ஆயோக் என்பது மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும். இந்த நிதி ஆயோக் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார். நிதி ஆயோக் வட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 24) தொடங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 23) டெல்லி சென்றார்.
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத உரிமைப் பங்கை வழங்க வேண்டும் என்று நான் கோரினேன். வாக்குறுதியளிக்கப்பட்ட 41 சதவீதத்திற்கு எதிராக தற்போது நாம் 33.16 சதவீதத்தை மட்டுமே பெறுகிறோம்.
அம்ருத் 2.0 ஐப் போலவே , தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருப்பதால், அர்ப்பணிப்புள்ள நகர்ப்புற மாற்றப் பணியின் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்.
தேசிய ஒற்றுமை மற்றும் பிராந்திய பெருமைக்காக ஆங்கிலத்தில் பெயர்களுடன் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணிக்கு #CleanGanga பாணி திட்டத்தையும் நான் வலியுறுத்தினேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவிக்கின்றது. இதில், பள்ளி கல்வி துறை, மெட்ரோ ரெயில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.