“மத்திய அரசு நியாயமாகச் செயல்பட வேண்டும்” - நிதி பகிர்வு குறைக்கப்படுவது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!
ஆங்கில நாளிதழ் ஒன்றில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வை மத்திய அரசு குறைக்க முயற்சிக்கிறது என்ற தலைப்பில் இன்று(பிப்.28) செய்தி வெளியானது. அதில் “மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்குகிற நிதி பகிர்வை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா சமர்ப்பித்த பரிந்துரைகள் வருகிற அக்டோபர் 31 முதல் 2026-27 ஆம் நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த பரிந்துரையின்படி, மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்த 41 சதவிகித மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 40 சதவிகிதமாக குறைக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு நியாயமாகச் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஏற்கெனவே தகுதியான அளவைவிட குறைவாகத்தான் தமிழ்நாடு பெறுகிறது. இப்போது மாநிலங்களின் பங்கை 41% முதல் 40% வரை குறைக்க நிதிக் குழுவுக்கு மத்திய அரசு அரசு பரிந்துரைக்க உள்ளது.
மத்திய அரசு நியாயமாகச் செயல்பட வேண்டும். சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு இப்படித்தான் வெகுமதி அளிக்கப்படுமா? 50% அதிகாரப் பகிர்வுக்கான எங்கள் கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்"
இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.