For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசு குடைச்சல் கொடுக்கிறது!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

11:19 AM Nov 18, 2023 IST | Web Editor
“பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசு குடைச்சல் கொடுக்கிறது ”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றச்சாட்டு
Advertisement

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு குடைச்சல் கொடுத்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் குற்றம் சாட்டினார்.

Advertisement

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியது.

இந்த சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

காய்ச்சல்,  தொண்டை வலி காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தாலும்,  எனது உடல் நலத்தை விட இந்த மாநிலத்தின் நலன்,  தமிழ்நாட்டின் நலன்,  சட்டப்பேரவையின் நலன் தான் முக்கியம் என உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிறேன்.  இந்த சூழ்நிலையில் இந்திய ஜனநாயகத்தை மோசமான நிலைக்கு கொண்டு போய் விடும் என்ற அச்சத்தில் தான் நான் இங்கே நிற்கிறேன்.

ஜனநாயக விழுமியங்களை காப்பதில்,  சமூக நல திட்டங்களை கொண்டு வருவதில் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக தமிழ்நாடு சட்டப்பேரவை உள்ளது.  அரசியல் பொருளாதார, சமூகநீதி திட்டங்களை இங்கு நிறைவேற்றி காட்டி இருக்கிறோம்.  இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் தலையாய மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு சிறப்பான மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

சமூகநீதி,  சுய மரியாதை, மத நல்லிணக்கம் உள்ளிட்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி வருகிறோம். இத்தகைய சூழலை தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கிறது. நிதி நெருக்கடி, ஒன்றிய அரசு நெருக்கடி இல்லாமால் இருந்தால் இன்னும் பல திட்டங்களை செய்து காட்ட முடியும்.

இடையூறு அதிகரித்ததன் விளைவாக தான் இந்த சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டியதாயிற்று. இன்று கூட்டி இருக்கும் சிறப்பு கூட்டம் அவசர அவசியம்,  ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலன் கருதியும்,  ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு, அனுமதியை நிறுத்தி வைத்திருப்பதாக குறிப்பிட்டு 13.11.23 அன்று திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர். அவர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்றி திருப்பி ஆளுநருக்கே அனுப்ப தான் இன்றைய சிறப்பு சட்ட பேரவை கூடி உள்ளது.

மக்களாட்சி தத்துவத்தின் படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநர் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். எந்த நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை. அவர் தனிப்பட்ட விருப்பு வெருப்பால் சில சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது தமிழ்நாடு மக்களையும் சட்டபேரவையையும் அவமதிக்கிறார் என அர்த்தம்.

ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்டமன்றத்திற்கு எதிரானதாக உள்ளது இறையான்மைக்கு எதிராக உள்ளது. மத்திய அரசுடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழக அரசுக்கு நிதியை பெற்று தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிதி பெற்று தரலாம், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படலாம். ஆனால், மாநில அரசின் திட்டத்திற்கு எப்படி முட்டுக்கட்டை போடலாம் என்று செயல்பட்டு வருகிறார்.

தினம் தோறும் யாரைவாது கூட்டி வைத்துக்கொண்டு ஆளுநர் வகுப்பு எடுக்கிறார். ஆனால் வகுப்பில் தவறான பாடங்களை எடுக்கிறார். விழாக்களுக்கு செல்லட்டும் ஆனால் விதண்டாவாதம் பேசுகிறார். அரசின் கொள்கை குறித்து பொதுவெளியில் விமர்சிப்பது சரியல்ல. பொது மேடைகளில் தமிழ் பண்பாடு, இலக்கியம் குறித்து அபத்தமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அனைத்து வகைகளிலும் தமிழக அரசு செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தமிழ்நாடு வளர்வதை காணப்பொறுக்காத காரணத்தால் ஆளுநர் செயல்படுகிறார் என நடுநிலையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத்தப்பட்டுள்ளது. நானும் பிரதமருக்கு இப்பிரச்சனை குறித்து கடித்தம் எழுதி இருக்கிறேன். அனைத்து முயற்சிகளும் எடுத்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் கதவுகளை தட்ட நேர்ந்தது.

தமிழ்நாடு அரசின் வாதங்களை கவனித்து கேட்டு பதில் அளித்திருப்பது தமிழக அரசுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் தருணத்தில் அவசர அவசரமாக 10 சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர். இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 200-ன்கீழ் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப சட்ட பேரவையால் தான் முடியும். அதனால் தான் 10 சட்ட முன்வடிவுகளும் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடி திட்டங்களை கொண்டு வந்து கொண்டு உள்ளோம். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும் இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்ததும் கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சிலவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதுமாக உள்ளார் ஆளுநர்.

நாம் எப்போதும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவோம். சட்டப்பிரிவு 200-ன் படி செயல்படுவோம். கருணாநிதி சொன்னதை போல மக்களுக்கும் மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு செயல்படுவோம். அதன் படி பின்வரும் சட்டமுன் முடிவுகளை முன்மொழிகிறேன்.

இவ்வாறு உரையாற்றிய பின் 10 சட்ட முன்வடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

Tags :
Advertisement