"தமிழகத்திற்கு நிதி நெருக்கடியை தரும் மத்திய அரசு" - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !
சிவகாசி மாநகர திமுக சார்பில் செயலாளர் உதயசூரியன் ஏற்பாட்டில், மத்திய அரசை கண்டித்து மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது,
"தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டு காலம் நிறைவு பெற்ற நிலையில், தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியுடன், வளம் சேர்க்கும் ஒரு ஆட்சியாக நடைபெறுகிறது.
தமிழ் மொழி உயர்வு பெற முனைப்புடன் இந்த ஆட்சி நடக்கிறது. பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவராக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளார். அதற்கெல்லாம் நற்சான்றாக ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு எதிராக
கூச்சலிட்டவர்கள் தேர்தலில் போட்டியிடாமல், எதிர்த்து நிற்காமல் ஓடி ஒளிந்து வீழ்த்துவோம்.
ஆனால் பந்து எழுவது போல 75 சதவீத வாக்குகள் திமுகவுக்கு பதிவாகியுள்ளது. இதே வரலாறு மீண்டும் 2026 ம் ஆண்டு தேர்தலில் திரும்பி உதயசூரியன் சின்னத்தில் தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களித்து மீண்டும் மு. க. ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் ஆக்குவார்கள்.
இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் விளங்கி, எண்ணற்ற திட்டங்களை தீட்டி கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்றடைய செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் ஆகியவற்றுக்காக தமிழக அரசு 17 ஆயிரம் கோடி செலவழித்து வருகிறது.
தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு பெற்றுக் கொண்டு தமிழகத்திற்கு வரவேண்டிய 20 ஆயிரம் கோடி இழப்பீடு தொகையில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பறித்து வருகிறது. உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மட்டும் 62 ஆயிரத்து 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு, தென் மாநிலங்களான தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு 27 ஆயிரத்து 336 கோடி மட்டுமே நிதியாக கொடுத்துள்ளது. தென் மாநிலங்களின் மக்கள் செலுத்துகின்ற ஜிஎஸ்டி வரி வட மாநிலங்களுக்கு நிதியாக செல்கிறது.
பட்ஜெட் என்பது வரவு- செலவு கணக்கு மட்டுமல்ல. தமிழக மக்களின் வாழ்வாதாரமும் அதில் அடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே வராமல் தமிழக மக்கள் மீது மத்திய அரசு வன்மத்தை கொண்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம் போன்றவற்றிற்கான 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை தராமல், ஹிந்தி படித்தால் தருவதாக கூறுகின்றனர். ஆனால் திமுக என்றும் மொழிக் கொள்கையை, தமிழக மக்களின் இரு மொழிக் கொள்கையை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காது.
சாதாரண மக்களுக்கான பணமோ, பெரிய அளவிலான திட்டங்களுக்கான நிதியோ மத்திய அரசு வழங்காமல் தமிழக அரசுக்கு ஒரு செயற்கையான நிதி நெருக்கடியை பாஜக கொடுத்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை திமுக வெற்றி பெற்று கைப்பற்றும். 7வது முறையும் திமுக ஆட்சி அமைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அமர மீண்டும் பொற்கால ஆட்சி தமிழகத்தில் அமையும்" என்று தெரிவித்துள்ளார்.