“பாஜக-வின் ஹிட்டன் அஜெண்டா மூலம் தவெக நடத்தப்பட்டு வருகிறது” - சட்டபேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் சேர்த்து பல கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா, “என் தலைவர் ஆண்டிற்கு 1000 கோடி ரூபாய் சம்பாதிப்பதை விட்டு வந்திருக்கிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா எடுத்து சம்பாதித்து வருகிறீர்கள். இதுவா அரசியல்? 2021 ஆட்சியமைத்த பிறகு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் வருமானம் என்ன? அரசியல் அதிகாரத்தை வைத்து செய்யும் எந்த செயலும் ஊழல்தான்” என திமுக அரசை விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டிற்கு 1000 கோடி ரூபாய் சம்பாதிப்பது குறித்து சட்டபேரவைத் தலைவர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் அவர் அளித்த பேட்டியில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆயிரம் கோடி வருவாயை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் சொல்கின்றர்.
ஆயிரம் கோடி வருமானம் வந்தால் 300 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் கடந்த ஆண்டு விஜய் 80 கோடி மட்டுமே வருமான வரி கட்டியுள்ளார். மீதமுள்ள 220 கோடி ரூபாயை வருமான வரித்துறை சோதனை நடத்தி வசூல் செய்யுமா? அவ்வாறு வசூல் செய்தால் பாஜகவின் ஆதரவோடு தமிழக வெற்றி கழகம் இல்லை என்பதை மக்கள் அறிவார்கள். பாரதிய ஜனதா கட்சியின் ஹிட்டன் அஜெண்டா மூலமே தமிழக வெற்றி கழகம் நடத்தப்பட்டு வருகிறது”
இவ்வாறு சட்டபேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.