தனியாரிடம் கையேந்தி நிற்கும் விமான போக்குவரத்துத் துறை - மத்திய அரசை விமர்சித்த எம்பி கனிமொழி சோமு!
நாட்டில் பேரிடர் காலங்களில், மக்களை காப்பாற்ற விமான போக்குவரத்து தேவையென்றால் கூட தனியாரிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவல நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக கனிமொழி சோமு எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
விமான போக்குவரத்தை முற்றிலும் தனியார் மயமாக்கியதன் விளைவாக விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் தனது அதிகாரத்தை இழந்திருப்பதாக கனிமொழி சோமு தெரிவித்துள்ளார். இதனால் பேரிடர் காலங்களில் விமான போக்குவரத்து தேவையென்றால் கூட தனியாரிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவல நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புது விமான போக்குவரத்து மசோதா 2024 குறித்து மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது :
“சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருத்தில் பெயர் வைப்பதை மத்திய அரசு தவிர்க்கவேண்டும். தொடர்ந்து மசோதாக்களை இந்தியில் முன்மொழிவது மூலம், இந்தி பேசாத மக்கள்மீது மத்திய அரசு இந்தியை திணிப்பது முறையல்ல. இந்திய அரசு விமானங்களை தயாரிப்பதில்லை, அரசுக்கு சொந்தமாக விமான நிலையங்கள் இல்லை. ஆனால் விமான தயாரிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் குறித்து இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது வேடிக்கையாக இருக்கின்றது.
இந்தியாவில் மேக் இன் இந்தியா எனும் முழக்கம் வெறும் முழக்கமாக மட்டுமே இருக்கிறது. அதேபோல் ஸ்டேண்ட்-அப் இந்தியா முழக்கம் ஸ்டேண்ட்-அப் காமெடியாகிவிட்டது. காலி பாத்திரங்கள் சற்று அதிகமாக சத்தமிடுவதைபோல, கடந்த பத்தாண்டுகளில் மோடியின் பாஜக அரசு உருவாக்கியுள்ள எண்ணற்ற முழக்கங்கள் வெற்று முழக்கங்களாக மட்டுமே உள்ளன.
இந்த மசோதா விமானங்கள் தயாரிக்கும் முறைக்கு சட்டங்கள் இயற்றவும், விமான பாதுகாப்பை உறுதிசெய்யவும், விமான விபத்துகளை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் விமானத் தயாரிப்பு, போக்குவரத்து, விமான நிலையங்கள் தொடர்பான அத்தனை நிறுவனங்களும் (ராஜிவ்காந்தி தேசிய விமானப் பல்கலைகழகம் உட்பட) ஏற்கனவே போதுமான சட்டத்திட்டங்கள் இயற்றபட்டு அதன்படி இயங்கி வருகின்றன. விமான போக்குவரத்து மசோதா 2024 என்கிற பெயரில் மத்திய அரசு அரைத்த மாவையே மீண்டும் அரைத்திருக்கிறது.
விமான போக்குவரத்தை முற்றிலும் தனியார் மயமாக்கியதன் விளைவாக விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் தனது அதிகாரத்தை இழந்திருக்கிறது. வருங்காலத்தில் நாட்டில் பேரிடர் காலங்களில், மக்களை காப்பாற்ற விமான போக்குவரத்து தேவையென்றால் கூட தனியாரிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவல நிலையை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது. ஏர் இந்தியாவை அடிமாட்டு விலைக்கு விற்றது மட்டுமல்லாமல், விமான நிலையங்களையும் அரசு விற்றுவிட்டது.
நாட்டில் தற்போது அரசு விமானங்களில் செல்லக்கூடிய வசதி படைத்தவர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் பிரதமர் மற்றொருவர் குடியரசுத் தலைவர். ஆனால் மக்களாகிய நாம் எல்லோரும் தனியார் விமானங்களையே நம்பி இருக்கிறோம். விமானக் கட்டணங்கள் சூதாட்ட விளையாட்டை போல் அன்றாடம் ஏறுவதை தடுத்து இரயில்வே பயணக்கட்டணங்களை போல் நிலையான விலையை அரசு நிர்ணயம் செய்யவேண்டும். அதேபோல் வெளியில் 20 ரூபாய்க்கு விற்க்கப்படும் தண்ணீர் பாட்டில் விமான நிலையத்தினுள், 100 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. வெளியில் 50 ரூ விற்கப்படும் இட்லி உள்ளே 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் சாமானிய மக்களுக்கு விமான பயணங்கள் அணுகக்கூடியதாக இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொண்டு மாற்றத்தை கொண்டு வரவேண்டும்” என தெரிவித்தார்.