விஜய் தலைமையில் தொடங்கியது தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்..!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூர் கூட்ட நெரிசலை தொடர்ந்து விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கினார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து தவெகவின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.
இந்த நிலையில் இன்று தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டுள்ளார். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பங்குபெறும் கட்சி நிகழ்ச்சி இதுவாகும்மேலும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,நிமல்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் விஜயின் தாயார் ஷோபா சந்திர சேகர் கலந்து கொண்டுள்ளார்.
பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு தவெக நிர்வாகிகள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.