மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!
மதுரையில் உள்ள அமலாக்கத்துறையின் துணை மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அங்கித் திவாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
10-க்கும் மேற்பட்ட திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் உள்ள அங்கித் திவாரி அறையில் சோதனையிட்டு வருகிறார்கள். அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிட்டு வருவதால் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் தற்போது இந்தோ - திபேத் எல்லை பாதுகாப்பு படையினர் 50-க்கும் மேற்பட்ட வருகை தந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அமலாக்கத்துறை அலுவலக முன்பாக தமிழ்நாடு காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.