கனிமச் சுரங்கம் அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்னும் அறிவிப்பு கண்டனத்துக்குரியது - செல்வப்பெருந்தகை!
தமிழ் நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”டங்க்ஸ்டன் மற்றும் அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு கடும் கண்டனத்துக்குரியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட இந்த உத்தரவு, மாநிலங்களின் உரிமையையும், மக்களின் ஜனநாயக உரிமையையும் பறிக்கும் செயல் ஆகும். எந்தவொரு சுரங்கத் திட்டமும் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அத்தகைய திட்டங்களை செயல்படுத்தும்முன், பொதுமக்களின் கருத்தை கேட்பது அரசின் முக்கிய கடமையாகும்.
முன்னர் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டமும், கன்னியாகுமரி கிள்ளியூரில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டமும் மக்களின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டன. இது போன்ற அனுபவங்களிலிருந்தே ஒன்றிய அரசு இப்போது மக்களிடமிருந்து கருத்து கேட்கும் உரிமையையே பறித்து விட முயல்கிறது. சாமான்ய மக்களின் நலனைவிட, பெருமுதலாளிகள், பெருந்தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அணுக்கதிர்வீச்சு காரணமாக புற்றுநோய், சிறுநீரக நோய், கருச்சிதைவு, தோல் நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், அணுக்கனிமச் சுரங்கங்களை மக்கள் விருப்பமின்றி அமைப்பது அப்பகுதி மக்களின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தலாகும்.
அதேபோல், பிற கனிமச் சுரங்கங்கள் விவசாயம், குடிநீர், வேலைவாய்ப்பு, இயற்கை சூழல் ஆகியவற்றை சீரழிக்கும். எனவே, மக்களிடமிருந்து கருத்து கேட்காமல் சுரங்க அனுமதி வழங்கும் ஒன்றிய அரசின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாநில அரசின் உரிமைகளையும், மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பறிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த சுரங்கத் திட்டங்களும் மக்களின் கருத்துக் கேட்காமல் அமல்படுத்தப்படக் கூடாது. மக்களின் உயிரையும், இயற்கையையும் காக்கும் பொறுப்பே அரசின் முதன்மை கடமை”
என்று தெரிவித்துள்ளார்.