”ஒட்டுமொத்த மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்படும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
அதிமுக பொதுச்செயலாள்ர் எடப்பாடி பழினிசாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 67 பேர் அதிமுகவில் இணைந்தனர்.மேலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் பெற்ற நான்கு மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் சங்கங்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அவரிடம் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
முதலில் அம்பைப் பகுதியை சேர்ந்த விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களை சந்தித்த பழனிசாமியிடம் அவர்கள் பாபநாசம் - மணிமுத்தாறு அணையை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், அப்படி இணைக்கும் பட்சத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மணிமுத்தாறு அணைக்கே அதிக அளவு தண்ணீர் செல்லும் பட்சத்தில் பாபநாசம் அணையில் தண்ணீர் நிற்காது எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து, மண்பாண்ட தொழிலாளர்கள் உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், இலவசமாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், நெசவாளர் சங்கத்தினர் நெசவாளர்களுக்கு ஜி.எஸ்.டி வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி மானியம் நெசவாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி ”கடந்த அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், கால்புணர்ச்சி காரணமாக இந்த ஆட்சியில் அந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.பாபநாசம்- மணிமுத்தாறு அணை இணைப்பு சாத்தியமா? சாத்தியம் இல்லையா? என்பது தொடர்பாக உரிய ஆய்வு செய்யப்பட்டு விவசாயிகள் கோரிக்கை என்னவோ? அதனை அதிமுக ஆட்சியில் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நான் ஒரு விவசாயி என்ற காரணத்தினால் விவசாய பணிகளுக்கு அதிமுக ஆட்சி வந்த பிறகு விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்படும். அதேபோல், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.ஒட்டுமொத்த மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதிமுக அரசு கண்டிப்பாக செயல்படும்”
என்று தெரிவித்தார்.