"தினமும் கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிப்பதுதான் இந்த ஆட்சியின் சாதனை" - இபிஎஸ் குற்றச்சாட்டு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் பேசியதாவது,
"எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நேற்று நடந்த கொலை சம்பவம் குறித்து சட்டசபையில் பேச முற்பட்டேன். அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டு மக்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்பட்டு வருகிறோம். நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
நாள்தோறும் கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. முதலமைச்சர் தலைமையில் உள்ள காவல்துறை செயலற்ற நிலையில் உள்ளது. குற்ற சம்பவங்களை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. குற்றம் நடந்தால் கைது செய்கிறோம் என அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கிறது. தினமும்
ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் கொடுப்பது போல தினமும் கொலை ரிப்போர்ட் பார்க்கப்படுகிறது. தினமும் கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிப்பதுதான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை"
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.