மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கொடி அறிமுகம், கட்சியின் பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைப்பெற்றது.
தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் தவெகவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2026 தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை எனவும் தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இன்னும் கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து வரும் தகவல் அனைத்தும் பொய்யான தகவல்கள் எனவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.