”வேளாண் சட்டங்கள் என்ன என்று தெரியும்..?” - முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஒமலூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”அதிமுக ஆட்சியில் மத்திய தேர்வு ஆணையத்திற்கு தகுதியான டிஜிபி பட்டியல் அனுப்பப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் டிஜிபி நியமனத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அடுத்த டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும். அதில் திமுக அரசுக்கு தடுமாற்றம் ஏன் ? திமுகவிற்கு சாதகமாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்துதான் இதுவரை டிஜிபி நியமிக்கப்படவில்லை. சட்டத்துறை அமைச்சர் தவறாக பேட்டி கொடுப்பது வெட்கக்கேடான விஷயம். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிறகு டிஜிபி தேர்வு பட்டியலை ஸ்டாலின் அரசு தயாரித்தது.
டெல்டா மாவட்டத்தில் குருவே சாகுபடி செய்த விவசாயிகள் துன்பத்திற்கு திமுக அரசின் மெத்தனமே காரணம். திமுக அரசு விவசாயிகளிடமிருந்து முறையாக நெல்லை கொள்முதல் செய்யவில்லை. டெல்டா மாவட்டங்களில் நான் நேரடியாக ஆய்வு செய்தேன். அங்கு 15 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் விளைச்சல் வரும் நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. திமுக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
நான் பச்சை துண்டு போட்ட பழனிசாமி என்று முதலமைச்சர் ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார். நான் சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகும் விவசாயி தான். விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் கட்சி திமுக. ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக இருந்தபோது ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு துணை நின்றார. டெல்டா மண்டலத்தை பாதுகாப்பான மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு. 50 ஆண்டு காலம் காவிரி நதிநீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தது அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. இந்த அரசின் மீது விவசாயிகள் கொந்தளிப்பாக உள்ளனர்
மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் குறித்து தெரிவித்ததை ஏன் திமுக அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. துணை முதலமைச்சர் தஞ்சாவூர் சென்று விவசாய நிலங்களை சுற்றி பார்த்தார். ஆனால் அவர் விவசாயிகளை பார்க்காமல் ரயில் நிலையத்திற்கு சென்று விவசாயிகள் அடுக்கி வைத்த நெல் மூட்டைகளை மட்டும் பார்த்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. விவசாய விரோத அரசாக திமுக உள்ளது.
முதலமைச்சருக்கு 3 வேளாண் சட்டங்கள் என்பது என்ன என்று தெரியுமா ? மூன்று வேளாண்மை சட்டத்தை என்ன என்று முதல்வர் சொல்லட்டும் அதற்கு பதில் நான் சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் எப்படி பாதிப்பு ஏற்படும்..? , வட மாநிலத்தில் மண்டி வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தான் பாதிப்பு. அதிமுகாவினர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்துவோம். காவிரி பிரச்சனைக்கு 24 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிகள் முடக்கினார்கள். திமுகவிற்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து என்ன பயன்..?
ஓபிஎஸ் டிடிவி இணைப்பு என்பது காலம் கடந்த கதை. அரைத்த மாவை அரைக்க வேண்டாம். எஸ் ஐ ஆர்-ரில் என்ன பிரச்சனை இருக்கிறது..?. நீங்கள் தான் ஆளுங்கட்சி (திமுக). தேர்தல் நேரத்தில் உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் இதுதான் எங்கள் நிலைப்பாடு” என்று பேசினார்.