அவதூறு வழக்கில் தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமீன்
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசலில் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, நீதிபதி குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அவதூறுகள் பரப்பியவர்கள் மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்கிறது.
இதனிடையே, திண்டுக்கல் த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் என்பவர், முதலமைச்சர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.