"விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கரூர் நெரிசலுக்கு காரணம்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படுவதை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்தார். இதுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம். கரூர் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர். காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.
அதே இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தனர். கட்டுப்பாட்டோடு நடந்துக் கொண்டனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது. கூட்டத்தில் சிக்கியவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்தது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது தவெகவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கினர்.
கரூரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் என 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தமிழ்நாடு அரசு சட்டப்படி விரைந்து கையாண்டது. உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். கரூர் கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என அரசியல் கட்சிகள் உறுதி ஏற்க வேண்டும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.