"மாணவர்களின் மருத்துவக் கனவை மெய்ப்பித்த மத்திய அரசுக்கு நன்றி" - நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் கூடுதலாக 350 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் அதற்கு முழு ஆதரவளித்த நமது மத்திய அரசுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் லட்சியத்துடன் அயராது உழைத்த பல மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாவதோடு, நமது சமூகத்திற்கும் தரமான மருத்துவர்கள் அதிகளவில் கிடைப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
நமது பாரதத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்தை செதுக்குவதிலும், இளைஞர்களின் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பதிலும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிகரற்றவர் என்பதை மீண்டுமொரு முறை உணர்த்தும் இந்த அறிவிப்பானது, அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், கூடுதலாக மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளில் ஒரு தமிழக அரசு மருத்துவக் கல்லூரி கூட இடம் பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவலானது, ஆளும் திமுக அரசின் அலட்சிய நிர்வாகத்திற்கு ஆணித்தரமான அவலச் சான்று.
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை தேசிய மருத்துவ ஆணையம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவது நாம் அறிந்ததே. இருப்பினும் தனியார் கல்லூரிகளுடன் போட்டி போட்டு கூடுதலாக ஒரேயொரு மருத்துவப் படிப்புக்கான இடத்தைக் கூடப் பெற முடியாதளவிற்கு அரசுக் கல்லூரிகளின் தரம் தாழ்ந்து போய்விட்டது என்ற தகவல் உண்மையில் மன வருத்தமளிக்கிறது. திராவிட மாடல் ஆட்சி அகன்றதும், முதலில் மீட்டெடுக்கப்பட வேண்டியது மயக்கத்தில் கிடக்கும் தமிழக மருத்துவத் துறையைத் தான்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.