"மதம் கேட்டு கொலை செய்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!" - உள்துறை அமைச்சர்!
உள்துறை அமைச்சர் அமித்ஷா, "ஆப்பரேஷன் சிந்தூர்" குறித்த விவாதத்தில் பங்கேற்று காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்து வருகிறார். பகல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதையும், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை பற்றியும் கூறி வருகிறார்.
நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட "ஆப்பரேஷன் மகாதேவ்" நடவடிக்கையில் காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பகல்காம் தீவிரவாத தாக்குதல் தகவல் கிடைத்ததும், தான் உடனடியாக மாலை 6 மணிக்கே ஸ்ரீநகர் சென்றதாகவும், அன்றிலிருந்தே தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.
"அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், அவர்களின் மதம் என்னவென்று கேட்டு கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அமித்ஷா தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.
மேலும் இந்திய ராணுவத்தின் "ஆபரேஷன் மகாதேவ்" என்ற தீவிரவாத வேட்டையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் சுலைமான் மூசா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பகல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களில் சுலைமான் மூசா ஒருவராவார். நேற்று நடத்தப்பட்ட என்கவுண்டரில் இந்திய ராணுவம் அவரை சுட்டுக் கொன்றது.
பகல்காம் உள்ளிட்ட தாக்குதல்களில் தொடர்புடைய சுலைமான், ஜிப்ரான், மற்றும் ஹம்சா ஆப்கான் ஆகிய மூன்று முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மூவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட M9 அமெரிக்கன் ரைபிள் மற்றும் இரண்டு AK 47 ரக துப்பாக்கிகள் சண்டிகருக்குக் கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் பாதுகாப்புப் படைகளின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளின் மூலம், தீவிரவாதிகள் இருந்த இடம் கண்டறியப்பட்டு, அவர்கள் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
தீவிரவாதிகளை NIA மற்றும் பாதுகாப்புப் படைகள் துல்லியமாக அடையாளம் கண்டதால் இந்த நடவடிக்கை சாத்தியமானது என தெரிவித்தார்.