கஷ்டப்பட்டு சேர்த்த ரூபாய் நோட்டுகளை அரித்த கரையான்... கதறி அழுத கூலித் தொழிலாளி தம்பதி - நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிகாரிகள்!
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அடுத்த கிளாதரி கக்கினியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், முத்துக்கருப்பு தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் கிடைக்கக்கூடிய கூலி வேலைகளை மேற்கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அதில் கிடைக்க கூடிய பணத்தை சிறிது, சிறிதாக சேகரித்து 500 ரூபாய்களாக மாற்றி தாங்கள் குடியிருந்து வரும் குடிசை வீட்டிலேயே தகர டப்பாவில் வைத்து புதைத்து வைத்துள்ளனர்.
அன்மையில் அந்த பணத்தை எண்ணும்போது அதில் சுமார் 1 லட்சம் இருந்ததாக கூறப்படும் நிலையில், அதனை வீட்டிற்குள் மீண்டும் புதைத்து வைத்து மேலும் பணத்தை சேர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்த குமார், முத்துக்கருப்பு தம்பதியர் உண்டியலை தோண்டி எடுத்து பார்த்தபோது அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் அன்மையில் பெய்த மழையால் நனைந்ததுடன், கரையான் அறித்து முழுவதுமாக சேதமடைந்திருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியர் செய்வதறியாது திகைத்த நிலையில் ஊடகங்கள் மூலம் செய்தி வெளியானதை அடுத்து, தகவல் அறிந்து சென்ற தாசில்தார் தலைமையிலான குழுவினர் அவர்களை அழைத்து சென்று முன்னோடி வங்கி மேலாளரை அணுகினர். இதனையடுத்து கிழிந்த ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றி தர வங்கிகளுக்கு அதிகாரம் இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்சனை குறித்து ரிசர்வ் வங்கிக்கு முறையாக கடிதம் அனுப்பி, அவர்களின் அறிவுரைபடியே செயல்பட முடியும் என்றும்; ரூபாய் நோட்டுகளை வாங்கிகொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.