”தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்”- அன்புமணி வலியுறுத்தல்!
தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்வதற்கு திமுக அரசு மறுத்து வருகிறது.
உத்தரப்பிரதேச உயர்கல்வி சேவைகள் ஆணையத்தில் 1989 முதல் 1992 வரை தினக்கூலி ஊழியர்களாக பணியில் சேர்ந்த மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை பணியாளர்கள் 6 பேர் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க அம்மாநில அரசு மறுத்து விட்டது. அவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியும் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் ம்அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பிறகாவது திருந்துவதற்கு முயல வேண்டும்.
அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 16, 21 ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை, வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு, வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்தத் தீர்ப்பின் நோக்கமாகும். ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பது தான் உண்மை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளனவோ, அவற்றில் பாதி, அதாவது கிட்டத்தட்ட 50% தற்காலிக நியமனங்கள் ஆகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பதை புதிய வாடிக்கையாகவும், கலாச்சாரமாகவும் திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 7500க்கும் கூடுதலான கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகின்றனர்; அரசு பள்ளிகளில் சுமார் 14,000 சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாக பணி செய்து வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல்வெறு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களும், பணியாளர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை குப்பையில் வீசி விட்டு, தற்காலிக ஊழியர்களை சுரண்டும் பணியில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது. திமுகவின் இந்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது.
தற்காலிக ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் தங்களுக்கு பணிநிலைப்பு வேண்டும் என்று போராடிய போதெல்லாம் அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதை திமுக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.
அரசுத்துறைகளில் பகுதி நேரப்பணிகள், ஒப்பந்தப்பணிகள், தற்காலிக அடிப்படையிலான பணிகள் போன்றவை அதில் ஈடுபடுவோரை சுரண்டுவதுடன், அவர்களின் கண்ணியத்தையும் குலைக்கின்றன. எனவே, தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிலைப்பு செய்வதுடன், அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.