ஈரோட்டில் மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்!
ஈரோடு அருகே உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலை
கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அந்தோணி ஜெரால்ட் (49) என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தார். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்தவர் மதிய உணவு அருந்திவிட்டு வகுப்பு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :
இதையும் படியுங்கள் : "பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதி" – மத்திய அமைச்சர் அமித்ஷா!
" ஈரோடு மாவட்டம் அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் இறந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது. மலைக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியர் பணியேற்று உழைத்த அந்தோணி ஜெரால்ட் வகுப்பறையிலேயே தன் கடைசி மூச்சையும் இழந்துள்ளார்.
அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரின் ஆசிரியர் பணியால் பல அறிஞர்கள் தோன்றுவார்கள். அவரின் நினைவைப் போற்றுவார்கள்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.