மதுரையில் தவெக-வின் 2வது மாநில மாநாடு - காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன?
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தியில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் மாநில மாநாடு அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றவுள்ளது. இதனிடையே தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு மதுரை மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்ட காவல்துறை மாநாடு நடத்த 30 க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் தவெக மாநாட்டிற்கு 5,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் விவரம்:
1) மாநாட்டிற்கு வருபவர்கள் 3 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) வெளி மாவட்டங்களில் இருந்து யார் தலைமையில் எந்தெந்த ஊர்களில் இருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை காவல்துறைக்கு வழங்க வேண்டும்.
3) மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) பார்க்கிங் இடத்திற்கும், மாநாட்டு மேடை இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்கப்பட வேண்டும்.
5) கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
6) விஜய் வந்து செல்லக்கூடிய வழியில் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
7) மாநாட்டிற்கு வருபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
8) தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் நடைபெறுவதால் பலர் சாலையை கடந்து செல்வார்கள். ஆகவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும்.
9) பார்க்கிங் இடத்திலிருந்தும், மாநாட்டு இடத்திற்கு மக்கள் வருகையில் பாதுகாப்பிற்கு, தன்னார்வலர்களை பயன்படுத்த வேண்டும்.
10) கொடி, அலங்கார வளைவு, பேனர், பட்டாசுகள் போன்றவையால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்.
11) பொதுப்பணித்துறை பொறியாளரிடம் மேடையின் உறுதித்தன்மை சான்று பெற வேண்டும்.
12) மின் பொறியாளர்களிடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும், கூம்பு ஒலிபெருக்கி, வானவேடிக்கை கூடாது.
13) மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய்யுடன் வருபவர்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது? அந்த விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
14) மக்கள் கூட்டம் வருவதால் ஆங்காங்கே அவர்கள் எளிதில் காணும் வகையில் எல்இடி அமைக்க வேண்டும்.
15) மாநாட்டு மேடை வரும் வழி, மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.
16) மாநாட்டில் தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு அனுமதி பெற்று நிறுத்தப்பட வேண்டும்.
17) தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மாநாட்டில் இருந்து வருபவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும்.
18) மாநாட்டில் கலந்து கொள்ளும் பாதுகாக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு தனித்தனி அவசரகால வழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
19) மாநாட்டில் பங்கேற்க வருபவர்கள் மாநாட்டிற்கு வரும் போதும், செல்லும் போதும் ஊர்வலமாக செல்லக்கூடாது.
20) மாநாட்டிற்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெறப்பட்டாலும், மாநாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள மின் சாதனங்கள் மற்றும் மின் விளக்குகள் ஆகியவற்றின் பாதுகாப்பு தன்மை குறித்து பொதுப்பணித்துறை, மின்பொறியாளரிடம் சான்றிதழ் பெற்றிட வேண்டும்.
21) கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வயது முதிர்ந்த உடல்நலக்குறைவு கொண்ட நபர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் மாநாட்டில் பங்குகொள்வதை தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது.
22) பெட்டி வடிவிலான (பாக்ஸ் டைப்) ஒலிபெருக்கிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
23) நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போதுமான எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் தன்னார்வலர்களை காவல் துறையினருக்கு உதவியாக போக்குவரத்தினை சீர் செய்யவும் பங்கேற்பாளர்களை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
24) மாநாட்டில் பங்கேற்பவர்களால் வரும் வழித்டத்தில் உள்ள பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதாரம் ஏற்படுத்தக்கூடாது.
25) நெடுஞ்சாலையிலும், நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ வைக்கப்படும் பட்சத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
26) மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது.
27) மாநாட்டில் பங்கேற்பாளர்கள் சாதி, மத மோதலை தூண்டும் விதமாக பேசக்கூடாது.