"திராவிட நல் திருநாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா?" - முதலமைச்சர் #MKStalin கேள்வி!
‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட நல் திருநாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய "திராவிட இயக்கமும் -கருப்பர் இயக்கமும் " நூல் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெற்று கொண்டார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து, நிகழ்ச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
"திருச்சி செல்வேந்திரன், பொன்முடி, சபாபதி மோகன் இந்த மூன்று நபர்களும்
முழங்காத மேடைகள் இல்லை. 1989ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பொன்முடிக்கு கருணாநிதி வாய்ப்பு கொடுத்தார். இதுவரைக்கும் எட்டு தேர்தலில் போட்டியிட்டு ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து, நான்காவது முறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
1998ம் ஆண்டு ஆங்கில நூலை கருணாநிதி வெளியிட்டார். அதனை முரசொலி மாறன் பெற்றுக்
கொண்டார். அதனுடைய தமிழாக்க புத்தகத்தை நான் இன்று வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது. இதைவிட வேறு என்ன பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும். 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புத்தகத்தின் தமிழாக்கம் வருகிறது.
இதையும் படியுங்கள் : INDvsNZ | நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை! 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நிதான ஆட்டம்!
அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடியலுக்கும், விடுதலைக்கும், மேன்மைக்கும்
தோன்றியதுதான் திமுக. அமெரிக்காவில் கருப்பின மக்கள் நிறத்தால் ஒதுக்கப்பட்டார்கள், இந்த
புத்தகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை பொன்முடி மிகவும் சிறந்த முறையில் தெளிவுற கூறியிருக்கிறார். அடிமைத்தனத்தை போக்கத்தான் திமுக உருவானது.
பலருக்கும் திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே அலர்ஜியாக உள்ளது. திராவிட நல் திருநாடு என சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகி விடுமா? இப்படி பாடினால் சிலருக்கு வாயும் வயிறும் எரியும் என்றால் அதை திரும்ப திரும்ப பாடுவோம். திராவிடம் என்பது ஒரு காலத்தில் இன பெயராக இடப்பெயராக இருந்தது. அது தற்போது அரசியல் பெயராக மாறியுள்ளது.
சாதி, சம்பிரதாயங்களின் பெயரால் காலம் காலமாக உருவாக்கி வைக்கப்பட்டிருந்த தடைகளை உடைக்கும் சட்டங்களை ஆட்சி அதிகாரத்தின் மூலம் திமுக கொண்டுவந்தது. ‘தடை அதை உடை’ அதுதான் நம்முடைய ஸ்டைல். அதனால் தான் ஆதிக்க சக்திகளுக்கு நம்மை பிடிக்கவில்லை.
நம்முடைய முழக்கம் எல்லோருக்கும் எல்லாம் என்பது எல்லோரும் சொல்கிறார்கள்.மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னேறி செல்கிறது. அதற்கு காரணம் திராவிடம் தான் என்று உறுதியாக சொல்ல முடியும்.நாங்கள் கடந்து வந்த வரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.