Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் பாஜகவில் தமிழிசை.... திமுகவின் அறிக்கை 20 ஆண்டுகள் பழையது என விமர்சனம்!

01:08 PM Mar 20, 2024 IST | Web Editor
Advertisement

ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் தன்னை மீண்டும் பாஜகவில் இணைத்துக்கொண்டார்.  மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த அறிவிப்பு என விமர்சித்துள்ளார்.

Advertisement

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக-வின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் மீண்டும் இணைத்து கொண்டார். அண்ணாமலை அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “தமிழிசை சௌந்தரராஜன் 25 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினராக இருந்துள்ளார். இரண்டு மாநிலத்தில் ஆளுநராக இருந்து ஒரு நல்ல பெயரை பெற்றுள்ளார். ஆளுநர் பதவி என்பது மிகப் பெரிய பதவி. அதை ராஜிநாமா செய்வதென்பது ஒரு எளிமையான முடிவு இல்லை. தமிழிசை சௌந்தரராஜன் ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளார்.

களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் தன் ஆளுநர் பதவி ராஜிநாமா செய்துள்ளார். தமிழிசை சௌந்தர்ராஜன் மீண்டும் தன்னை பாஜகவில் உறுப்பினராக இணைந்து கொண்டார். கடந்த காலத்தில் விட்டு சென்ற அதே உறுப்பினர் எண் தற்போது அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழிசை பதவியை ராஜிநாமா செய்ததற்கு நேற்று முதல் தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். அவர் இன்று தமிழக அரசியலில் கால் வைத்துள்ளார்.

பாஜக கட்சியில் மட்டும் தான் எந்த பதவியில் இருந்தாலும்,  எல்லாவற்றையும் ராஜிநாமா செய்து விட்டு அடிப்படை உறுப்பினர் பதவிக்கு வர முடியும்.  ஒரு நல்ல அனுபவத்துடன் தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது அரசியல் களத்துக்கு வந்துள்ளார்” என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,

கடந்த காலத்தில், கமலாலயத்தில் கொடுத்த உறுப்பினர் அட்டையை திரும்பப் பெற்றுள்ளேன். மிக மகிழ்ச்சியாக உள்ளது. பதவியை ராஜிநாமா செய்யும் கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்துள்ளேன். 400 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். இன்று கமலாலயத்திற்கு வந்தது ஒரு உணர்வுப்பூர்வமாக உள்ளது. 

ஆளுநர் பதவியை விட பாஜக சாமானிய கட்சியின் உறுப்பினர் பதவியை தான் நான் மிகப்பெரிய பதவியாக கருதுகிறேன். புதுச்சேரியில் பல்வேறு சவால்களை சந்தித்தேன். இரண்டு பொதுத் தேர்தலை சந்தித்தேன். நான் எந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று தலைமை தான் முடிவு செய்யும். தமிழ்நாட்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். 

சாமானிய மக்களுக்கு உதவி செய்ய தான் ஆளுநர் பதவி ராஜிநாமா செய்தேன். பாஜக தவிர மற்ற கட்சிகளில் வாரிசு அரசியலை தான் பார்க்க முடியும். பாஜக தவிர வேற எந்த கட்சிகளும் பெண்களுக்கு முழு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அண்ணாமலை ஒரு சிறந்த கூட்டணி அமைத்துக் கொடுத்துள்ளார். எங்கள் கட்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வேறு மண்ணில் இருந்ததால் என் மண் என் மக்கள் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நட்பு ரீதியாக பழக நினைக்கவில்லை. திமுக EVM இயந்திரம் இருந்ததால் தான் வெற்றி பெற்றார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை நான் வெற்று அறிக்கையாக பார்க்கிறேன்.

இந்த தேர்தல் அறிக்கையை பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த அறிவிப்பு போல் இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை தோல்வி அறிக்கை. கமலாலயத்தை நான் ஒரு ஆலயமாக கருதுகிறேன்” இவ்வாறு தெரிவித்தார். 

Tags :
AnnamalaiBJPcandidate listDMKElection2024L Muruganloksabha election 2024manifestoNews7Tamilnews7TamilUpdatestamilisai soundararajan
Advertisement
Next Article