தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” - #EPS கண்டனம்!
தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18) நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும், என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். அதேபோல் எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,
“இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும்.
இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி! திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு! தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.