For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த வேண்டும் | #EPS வலியுறுத்தல்!

11:16 AM Oct 04, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில்  விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த வேண்டும்    eps வலியுறுத்தல்
Advertisement

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக டெங்கு, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5,000-த்தைக் கடந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. குறிப்பாக, இன்றைய நாளிதழ்களில் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும், அதில் குழந்தைகள், முதியவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மழைக் காலங்களில் பரவக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் விஷக் காய்ச்சல் போன்ற நோய்கள் தற்போதே மக்களை தாக்கத் துவங்கி உள்ளதாகவும்; பல்வேறு மாவட்டங்களில் டெங்கு போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாகவும், இதனால் பல அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும்; போதுமான மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்றும்; ஒருசில அரசு மருத்துவமனைகளில் ஒரே ஊசியை பல நோயாளிகளுக்குப் போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள், இந்த அரசால் வழங்கப்படுவதில்லை என்பதை நான் பலமுறை அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டி இருந்தேன்.

எனவே, உடனடியாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மேலும், பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகள் கழிவுநீரால் நிரம்பி வழிவதாகவும், அவை முழுமையாக அகற்றப்படாத நிலையில், அரசு மருத்துவமனைகளே நோய்களை உருவாக்கும் கூடாரங்களாக மாறி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இதனால் மிகவும் பாதிப்படைகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கும் நிலையில், காய்ச்சல் முகாம் நடத்துதல்; குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுத்தல்; பழைய டயர், பாத்திரங்களில் மழைநீர் தேங்காமல் தடுப்பது; இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது; குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து தெளித்தல்; கழிவு நீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது; கொசு மருந்து அடிப்பது போன்ற எந்தவித முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளாமல், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாமல், தன் உடல் நலனை தினமும் பேணிக் காக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யாமல் சப்பைக் கட்டு கட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது வேதனையளிக்கிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருந்துப் பொருட்களை மொத்தமாக வாங்கித் தராததால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் ஏழை, எளிய நோயாளிகளுக்குத் தேவையான ஆன்டிபயாட்டிக் மருந்து மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குத் தேவைப்படும் அனைத்து மருந்துப் பொருட்களும் முழுமையாக இருப்பதை சுகாதாரத் துறை அமைச்சர் உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.

"நோய் நாடி, நோய்முதல் நாடி… என்ற வள்ளுவர் அறிவுரைக்கேற்ப, மழைக்காலம் நெருங்குவதால் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்கள் அதிகமாக பரவி வருவதால், தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் இணைந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தல்; காய்ச்சல் முகாம்கள் நடத்துதல்; தொடர்ந்து கொசு மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement