“தமிழ்நாடு திமுகவை நிச்சயம் நிராகரிக்கும்...” - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸையும், திமுகவையும் நிராகரிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, வானதி ஸ்ரீனிவாசன், மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ‘நெல்லையப்பர் தேர்’ போன்ற நினைவுப் பரிசினை பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர். இதையடுத்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது :
“மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத அரசு தமிழகத்தில் இருக்கிறது. அதையும் தாண்டி திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்களை கெடுக்க வேண்டும், தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மாநில அரசு செயல்பட்டு வருகிறது. வளர்ச்சியை தடுக்கவும், நாட்டை கொள்ளையடிக்கவும் முயற்சிக்கின்றனர். ஆனால் நான் அதை நடக்கவிடமாட்டேன்.திமுகவினர் வெறுப்பு அரசியலை பரப்புகின்றனர். திமுகவினர் குடும்ப வளர்ச்சியை மட்டுமே பார்க்கின்றனர். மாநில வளர்ச்சியை பார்ப்பதில்லை. தமிழ்நாட்டுக்கும் இந்திக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகனை மத்திய அமைச்சராக்கியதுடன், மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக்கி இருக்கிறோம். அவர் இந்தி பேசும் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ராமர் கோவில் திறப்பால் ஒட்டுமொத்த நாடும் சந்தோஷம் அடைந்தது. ஆனால் திமுக நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை எதிர்ப்பதுடன், இந்தி வேறு தமிழ் வேறு என்று பேசுகிறார்கள். திமுக பொய்வேசம் போட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. மொழியை வைத்து மக்களை சிறுமைப்படுத்தி வரும் திமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழ்நாட்டில் திமுகவை இனி பார்க்க முடியாது. இனி திமுக எங்கு தேடினாலும் கிடைக்காது.
10 வருடம் ஆட்சி செய்த அனுபவம் என்னிடம் உள்ளது. தென்னிந்திய மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் பாஜகவுக்கு நன்றாக தெரியும். 2024 தேர்தலில் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்து பாஜக நிற்கின்றது. திமுகவும் காங்கிரஸும் இதற்கு எதிர் பக்கத்தில் நிற்கின்றனர். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து சம்பாதிக்க நினைக்கின்றனர். அவர்களது குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் வரவேண்டும் என்று நினைக்கின்றனர்.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்வீர்கள் என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களிடம் பதில் இருக்காது. அவர்கள் வாரிசு அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸையும் திமுகவையும் தமிழ்நாடு கண்டிப்பாக நிராகரிக்கும். உங்கள் பிள்ளைகளுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அதற்கு பதில் இருக்காது. உங்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட நான் இருக்கிறேன். மோடியாகிய நான் இருக்கிறேன்.
தமிழில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு புரியும்படி தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்குள் அதிகமாக இருக்கிறது. என்னுடைய மொழி உங்களுக்கு புரியவில்லை என்றாலும், என்னுடைய மனதை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவளிக்கிறீர்கள். என்னை ஆசீர்வதிக்கிறீர்கள். 3வது முறையும் பாஜக ஆட்சி அமைக்கும் என்பது எதிர்க்கட்சியில் இருப்போருக்கும் தெளிவாக தெரிந்துவிட்டது. பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அது எல்லாம் மட்டுமே வாக்குகளாக மாறாது. வீடு வீடாகச் செல்ல வேண்டும். ஒவ்வொரு பூத்தாக செல்ல வேண்டும். 400 இடங்களில் நாம் வெற்றி பெற வேண்டும். வீடு வீடாகச் சென்று நீங்கள் உழைக்கும் உழைப்பை விட கூடுதல் மடங்கு நான் உழைப்பேன்.”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.