தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு !
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.எதிர்க்கட்சியினரின் பல்வேறு அமளிக்கு இடையே இரு அவைகளும் நேற்று பலமுறை ஒத்தி வைக்கப்பட்டன. இன்று பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டி ஆர் பாலு, கனிமொழி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் தமிழ் நாடு அரசானது” தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடம் பெற்றிருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழ் நாடு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சங்கள் அடைந்துவரும் வேளையில் மற்றும் ஒரு மணிமகுடத்தை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குச் சூட்டியுள்ளது. 21.7.2025 அன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1,14,710. இந்திய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழ்நாடு ரூ.1,96,309/- பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வருகிறது என்பதற்கு மற்றும் ஒரு சான்றுதான் நாடாளுமன்றத்தில் ஒன்றிய இணையமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பாகும்.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.