தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை....நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!
தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்கிற மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப். 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 135 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. மொத்தமாக 874 ஆண்களும் 76 பெண்களும் என மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது.
அந்த வகையில், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம் ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறினால் இரண்டு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக மக்கள் சொந்த ஊர் செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு
தேர்தலையொட்டி, புதுச்சேரியில் 5-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக கூட குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் இன்று (ஏப். 17) மாலை 6:00 மணி முதல், ஏப்ரல் 20-ம் தேதி காலை 6:00 மணி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.