"வாழத் தகாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது" - அண்ணாமலை குற்றச்சாட்டு!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (82). இவரது மனைவி பர்வதம் (75). இவர்கள் இருவரையும் பக்கத்து வீட்டுக்காரர் ரமேஷ் (46) நேற்று இரவு வெட்டிக் கொலை செய்தார். கோழி மேய்ச்சல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக தெரிகிறது. போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில்,
தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை…— K.Annamalai (@annamalai_k) March 13, 2025
கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை.
காவல்துறை மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள். சேமலைகவுண்டம்பாளையம் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான், தமிழ்நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரவித்துள்ளார்.