பிரதமரின் மனதில் தமிழ்நாடு நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளது - ஜே.பி.நட்டா பேச்சு!
பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருவதாகவும், பிரதமரின் மனதில் எப்போதும் நிரந்திரமாக இடத்தை பிடித்திருப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழலில் என் மண் என் மக்கள் இன்று சென்னையில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க சென்னை வந்தடைந்தார். அவரை அண்ணாமலை, வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
இந்த விழா மேடையில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கூறியதாவது:
“தமிழ்நாடு தேசிய வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகிறது. திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் பங்களிப்பு, நம்மை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களின் இதயங்களில் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. தமிழ்நாடு பிரதமரின் மனதில் எப்போதும் நிரந்திரமாக இடத்தை பிடித்திருக்கிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து கௌரவித்து இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு பெருமை கொள்ளும் விதத்தில் இருக்கிறது. செல்வாக்கு நிறைந்த தமிழ்நாடு, மிகவும் மோசமான ஆட்சி செய்பவர்களின் கையில் இருந்து வருகிறது. இங்கே மோசமான தலைவர்கள் இருக்கிற ஒரு ஆட்சி நடந்துகொண்டு வருகிறது. தமிழ்நாட்டை திசை திருப்பும் திமுகவின் தலைமையில் இந்த மாநிலம் இருந்து வருகிறது.
பிரதமர் இந்த ஆட்சிக்கு வந்தது முதல் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தில் இந்த மண்ணை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார். இந்த மண்ணில் யாரெல்லாம் ஊழல் ஆட்சி செய்து வருகிறார்களோ, அவர்கள் எல்லாம் தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்துகொண்டு இருக்கிறது. இந்தியில் பேசுவது எனது கோரிக்கை. நாம் உலக பொருளாதாரத்தில் நம்மை ஆண்ட இங்கிலாந்தை பின் தள்ளிவிட்டு 5வது இடத்திற்கு வந்திருக்கிறோம்.