For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை தாக்கல்: தேர்தல் சிறப்பு அறிவிப்புகளுக்கு எதிர்பார்ப்பு!

03:56 PM Feb 18, 2024 IST | Web Editor
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை தாக்கல்  தேர்தல் சிறப்பு அறிவிப்புகளுக்கு எதிர்பார்ப்பு
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்கிறார்.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (பிப்.19) தேதியன்று தாக்கல் செய்யவுள்ளார். நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரும் 20-ம் தேதியன்று தாக்கல் செய்கிறார். அன்றைய தினமே எதிர்வரும் நிதியாண்டின் செலவுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவதுடன், நிதிநிலை, வேளாண் அறிக்கைகள் மீதான பொது விவாதம் நடைபெறவுள்ளது.

நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்கள் வரும் 21-ம் தேதியன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் நடைபெறவுள்ளன. காலையில் 10 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் பேரவை கூடவுள்ளது. நிதிநிலை, வேளாண்மை அறிக்கைகள் ஆகியவற்றின் மீதான பொது விவாதங்களுக்கு வரும் 22-ம் தேதியன்று பதிலுரைகள் அளிக்கப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களான தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவிருப்பதால் வரும் பட்ஜெட்டில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய அறிவிப்புகள் மக்களை கவரும் வகையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Tags :
Advertisement