For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆலையில் அமோனியா கசிவு: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

11:15 AM Dec 27, 2023 IST | Web Editor
ஆலையில் அமோனியா கசிவு  தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை
Advertisement

அமோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் இந்த உர ஆலையில், ஆய்வு நடத்த குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. 

Advertisement

எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர்.  கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கடலில் கப்பலிலிருந்து அமோனியா வாயு எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலைக்கு பைப் லைன் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து அமோனியா திடீரென வெளியேறியதால்தான் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.  அமோனியா கசிவால் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் தற்காலிகமாக அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.  பின்னர் சூழல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பொதுமக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.  இந்நிலையில், அமோனியா வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, அமோனியா வாயு கசிவுக்கு காரணமான உர உற்பத்தி ஆலையான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில்,  வழக்கமான செயல்பாட்டின் ஒரு பகுதியாக 26/12/2023 அன்று 23.30 மணி அளவில் ஆலை வளாகத்திற்கு வெளியே கரையோரத்திற்கு அருகே அம்மோனியா இறக்கும் சப்ஸீ பைப்லைனில் அசாதாரண சூழல் நிகழ்வதை கவனித்தோம். குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.

​​இதனால் உள்ளூரில் உள்ள சில பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பியுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மேலும், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.  கோரமண்டல் எப்பொழுதும் மிக உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் அவசரகால பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கிறது என்று கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  அமோனியா கசிவு ஏற்பட்ட எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் இந்த உர ஆலையில், ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  ஆய்வு அறிக்கை வந்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement