தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - ஏப்.22ல் நயினார் நாகேந்திரன் ஆஜராக தாம்பரம் போலீஸ் சம்மன்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏப்.22ல் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தாம்பரம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் இலவசமாக கொடுப்பதை தடுக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தாம்பரம் ரயில்நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ் 7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மூன்று நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல் இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் பணத்தை எடுத்து வந்த சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜன் முன்னிலையில் போலீசார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக திமுக அளித்த புகாருக்கு திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பதில் அளித்திருந்தார். அந்த பதிலில் தெரிவித்ததாவது..
” இரண்டு லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. நான்கு கோடி ரூபாய் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரி துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது குறித்து இதுவரை எந்த தகவலும் தங்களுக்கு வருமான வரித்துறையில் இருந்து வழங்கப்படவில்லை.
பத்து லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் அது குறித்து வருமானவரித்துறை தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் நான்கு கோடி பிடிபட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.” என தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க காவல்துறை தரப்பில் தனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என நயினார் நாகேந்திரன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.