சூர்யவன்ஷியின் மிரட்டல் சதம்... ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு!
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதின.
போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு குஜராத் 209 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனையடுத்து 210 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி களமிறங்கினர். இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு ஏற்ப அதிரடியாக விளையாடி இருவரும் பவர் ப்ளே முடிவிலேயே 80 ரன்களுக்கு மேல் குவித்தனர்.
தொடர்ந்து 15 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அபார வெற்றிப் பெற்றது. சூர்யவன்ஷி சதம் விளாசினார். இப்போட்டியில் வெறும் 35 பந்துகளில் சதம் விளாசிய சூர்யவன்ஷி 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். தனது அதிரடி பேட்டிங்கால் அணியின் வெற்றிக்கு மட்டும் வித்திட்டதில்லாமல், டி20 போட்டியில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மேலும் குறைந்த வயதில் ஆட்டநாயகன் விருது, குறைந்த வயதில் அதிவேக சதம் விளாசிய முதல் இந்தியர், 2025 ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதன்மூலம் இன்று நாடு முழுவதும் சூர்யவன்ஷியே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளார். இவரின் இந்த சாதனையை பல கிரிக்கெட் ஜாம்பவான்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இவரின் இந்த சாதனையை பாராட்டும் விதமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.